வாருங்கள் தோழமை தோட்டத்து மலர்களே...

Monday, June 18, 2012

மதுரை மாவட்டத்தில் ஒரு எழில் அருவி







மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரே அருவி குட்லாடம்பட்டி தாடகை நாச்சி அருவி ஆகும். இயற்கை எழில் கொஞ்சும் மலை மேல் ஒரு அழகிய வெள்ளி அணிகலனாக மழைக்காலங்களில், மண் தொட சலங்கை ஒலி எழுப்பி. மலை மேலிருந்து வழிந்தோடி வருகிறது.
 மதுரையில் பெரியார் பேருந்து நிலையம் இருந்து  41ஆம் எண் கொண்ட பேருந்தில் ஏறி பயணித்தால் குட்லாடம்பட்டி வந்தடையலாம். இல்லையேல் வாடிப்பட்டி வந்து சிற்றுந்தில் பயணிக்கலாம்.






அழகிய சிறுமலை வானுயர்ந்து நிற்க... வழியெல்லாம் பசுமை வரவேற்க.. பெரியார் சமத்துவபுரம் மலை அடிவாரத்தில் அமைதியான சூழலில் அமைந்திருக்கிறது. சிறுது தூரம் சென்றால் அருவியின் சலசலப்பு ஓசை சலங்கை ஒலியாய் கேட்க அருவி மகள் அருகில் வந்துவிட்டோம் என்று உணரலாம். பின் மலை மேல சிறிது தூரம் படிக்கட்டுகளில் பயணித்து செல்லும் வழியில் பூமியின் அழகை ரசிக்காது செல்ல மனம் இடம் தராது. மலைகள் எல்லாம் வான் தொட முயல மரங்கள் சிறு செடிகளாய் குறுகி காட்சி தரும். ஊரெல்லாம் மறைந்து விட இயற்கையின் அழகு மாத்திருமே நம் கண்களை சொக்க வைக்கிறது.




கண்களில் காண்பது நீரா!! இல்லை வைரத்தை உருக்கி யாரேனும் வழிந்தோட விட்டுவிட்டாரா?? ஆர்ப்பரிக்கும் சத்தத்துடன் நம்மை ஆரவாரம் கொள்ள வைக்கிறது பேரருவி. பசுமை சிகரத்திற்கு ஒரு வைர மாலை இறைவன் சூட்டியுள்ளானோ??










எங்கும் குளுமை நம்மை உள் மகிழ்விக்க சாரல் நம்மை இனி ஒரு நொடியேனும் காத்திருக்க விடாமல், அருவியின் அணைப்புக்குள் அன்பு கரம் கொண்டு வாரி எடுத்துகொள்ளும். அடடா அடடடடா உலகை மறந்து நம்மை மறந்து நாம் இயற்கையின் அணைப்பில் ஒன்றிவிடுகிறோம் தற்போது. காற்று வேலி இல்லை போன்று நம் மகிழ்ச்சிக்கும் வேலி இல்லாது மனம் கொண்டாடுகிறது. அருவி மகளின் மேல் மையல் கொண்டு நேரம் என்பதை மறந்தும் நாம் விளையாடலாம். பசுமை வீட்டுக்குள் பாடி ஆடலாம். மூலிகைகளை முத்தமிட்டு மலையினில் பேரருவியாய் வரும் நீர்முத்துக்களுக்கு நம் உடம்பை கொடுத்து பேரானந்தம் பெறலாம்.



குளித்து முடித்து ஆடை மாற்றி சென்ற வழியில் மலையில் இருந்து கீழிறங்கி வந்து சிறிது தூரம் கிழக்கே போனால் ஒரு மலைப்பாதை நம்மை அழைக்கும். ஆம் அருவிக்கு தன் பெயர் தந்த தாடகை நாச்சியம்மன் கோவில் செல்லும் வழியது. மூட்சிரைக்க கொஞ்சம் மலை ஏறினால் அங்கு கூரை இல்லாது சுவர் இல்லாது இயற்கை கொஞ்சும் அழகையே இருப்பிடமாய் கொண்டு விளங்குகிறது சிறு கோவில். உடைந்த சிலைகள் சில கோவில் மணிகள் இலை இன்றி மேலோங்கி நிற்கும் மரம் ஒன்று இவைதான் அங்கு வசிக்கும் தாடகை நாச்சியம்மன் கோவில் சூழல். அருகில் நம்மை மகிழ்விக்க ஆகா கீழே நம்மை கட்டி அணைத்த அருவியின் நீரோட்டம் இங்கு எழிலாய் அமைந்திருக்கும். குளம் போன்ற நீரில் துள்ளி விளையாடலாம் இவ்விடம். குரங்குகளின் குடும்பத்தார் பலரையும் கண்டு குதுகளிக்கலாம்.





மனம் இன்றி மலை இறங்கி சுகித்த ஞாபகங்கள் இனிமை தர மீண்டும் வரும் எண்ணத்துடன் வீடு திரும்பலாம்.குடும்பத்துடன் சென்று குதூகலிக்க, நண்பர்களுடன் சென்று ஆரவாரம் செய்திட, காதலர்கள் இதமாய் இனிமை உணர்ந்திட அருமையான ஒரு இடம் இந்த குட்லாடம்பட்டி தாடகை நாச்சியம்மன் அருவி. மழைக்காலங்களில் மட்டுமே அருவி பெருகி வருகிறது. 


வரலாறு:
தாடகை நாச்சியம்மன் என்பது ராமாயணத்தில் வரும் சூர்ப்பனகை என்று செவி வழி செய்தி கூறுகிறது. இந்த அருவியானது 90 களில் ஏற்பட்ட மழை  வெள்ளத்தினால் பாறைகள் உருண்டு வந்து வழி தந்ததினால் அனைவரும் செல்லும் வண்ணம் அமைந்தது.

மேலும் படங்கள்:

மலைப்பாதை 




பசுமை கொஞ்சும் மலை



இயற்கை எழில் அழகி 




அருவி சாலை 



மலை மேல் அருவி செல்லும் வழியில் தென்படும் காட்சி 


1 comment:

  1. வணக்கம் ஈசன்,

    http://ta.wikipedia.org/wiki/குட்லாடம்பட்டி_அருவி எனும் கட்டுரையை கலைக்களஞ்சிய நடையில் தங்களால் விரிவாக்க முடியுமா ?

    நன்றி!

    ReplyDelete